பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை திருத்துமாறு சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மார்ச் 22ஆம் திகதி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்ட நிபுணர்கள் அடங்கிய விசேட குழுவொன்றை இந்த சட்டத்தை ஆராய்வதற்காக நியமித்தது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படிஇ சட்டமூலத்தின் 3,4,10,11,13,14,15,16,28,30,31,36,82,83,84,85 மற்றும் 86 ஆகிய சரத்துக்களில் குற்றவியல் சட்டத்தின் கொள்கைகளை மீறுவதாகத் தெரியவந்துள்ளது.
சட்டமூலத்தின் சில சரத்துகள் நீதியை நிலைநாட்டும் முறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அது அடிப்படை உரிமைகளுக்கு முரணானது எனவும், குறித்த குழு கூறியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தில் உள்ள குறித்த சரத்துகள் கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடுவற்கான சுதந்திரம் பயணங்களை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சட்டமூலத்தை திருத்துமாறு நீதி அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கோரியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருத்தமின்றி சட்டமூலம் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டால் அதனை ஆட்சேபனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
