பிள்ளையானின் வாகனத் தொடரணியில் சிக்கி முதியவர் படுகாயம்
-கல்முனை நிருபர்-
இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் வாகனத் தொடரணியில் சிக்கி முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, கல்முனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரு உள்ளக வீதிகளை இணைக்கின்ற சந்தியில் இராஜாங்க அமைச்சரின் வாகனத் தொடரணியில் சென்று கொண்டிருந்த கெப் ரக வாகனமும் மறுமுனையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி இவ்விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆர். பொன்னுத்துரை (வயது-75) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படடுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு விபத்திற்குள்ளான கெப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.
சித்திரை புத்தாண்டு நிகழ்ச்சிக்காக இன்று காரைதீவு கல்முனை பகுதிகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



