பயங்கரவாத சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அபாயகரமானது

-அம்பாறை நிருபர்-

பயங்கரவாத சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அபாயகரமானது என மாற்றத்திற்கான முன்னணி செயற்பாட்டாளர் சிரேஸ்ட சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

1979 ஆம் ஆண்டு 6 மாதங்களுக்கு தற்காலிகமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் (PTA). கடந்த 44 வருடங்களாக தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று சொல்லப்பட்டாலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியது.இந்த பின்னணியிலேயே எதிர்ப்புக் கோஷம் உருவாகி இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று கையொப்ப வேட்டைகள் நடாத்தப்பட்டன.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA) தொடர்பில் நாட்டு மக்களின் விழிப்புணர்ச்சி அவசியமானதாக காணப்படுகிறது. ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சிவில் சமூகமும் பயந்து கொண்டிருக்கின்றார்கள் ஏனென்றால் வெளிநாடுகளுக்குச் சென்று பேட்டி கொடுத்தாலும் எம்பி பதவிகளுக்கு ஆப்பாக அமைந்து இலகுவாக கைது செய்ய படக்கூடியதாக காணப்படுகிறது.

DIG கையொப்பமிடுவதன் மூலம் ஒரு வருடத்திற்கு மேலாக தடுத்து வைக்கவுமுடியும். நீதவானுக்கு முன்னால் 3அல்லது6 மாதங்களின் பின்னரே ஆஜர் படுத்துவதற்கும் ஏற்பாடு காணப்படுகிறது.

மேலும், ஒரு வருடம் நீதிமுறை விசாரணை என்ற அடிப்படையில் தடுத்து வைப்பதற்கும் ஏற்பாடு காணப்படுகிறது. தடுத்து வைக்கின்ற பொழுது சித்திரவதைக்கும் பிழையான வழிநடாத்தலுக்கும் வழிவகுக்கும்.

இந்த சட்டத்தினை ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் 6 நாட்கள், பிரான்சில் 7 நாட்கள், இங்கிலாந்தில் 28 நாட்களுடன் மேலும் ஒரு 14 நாட்களும், தொடர்ச்சியாக யுத்தம் நடைபெற்று வருகின்ற துருக்கியில் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க முடியும். இந்த புதிய சட்டத்தை உற்று நோக்குகையில் மனித உரிமைகளை மீறுகின்ற ஒரு சட்டமாக காணப்படுகிறது.

அதேபோன்று அரசியல் அமைப்பிற்கு முரண்பாடாகவும், பழிவாங்கும் நோக்கிலும் காணப்படுகிறது. நீதிமன்றில் வழக்கு விளக்கத்திற்கு எடுக்காமல் சட்டமா அதிபர் விரும்பினால் புணர் வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பவுமுடியும். இந்தச் சட்டத்தின் ஏற்பாடுகளை பார்க்கின்ற பொழுது அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் மீறுகின்றது.

இச்சட்டத்தினால் பயங்கரவாதத்தை தடுக்க முடியுமா? மாறாக பயங்கரவாதத்தை தூண்டுவதாக காணப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு, ஜனநாயகத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் ஆட்சியாளர்களை பாதுகாக்கின்ற ஒரு சட்டமாக எதிர்காலத்தில் மாற்றமடையும். ஏனென்றால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் காணப்படுகிறது.

DIG அல்லது படைத்தளபதி வேண்டிக்கொண்டால் நீதவானின் கட்டளையில்லாமல் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை தடுக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கவும் ஆயுதப்படைகள் அப்பிரதேசத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் முடியும். இவை அரசியலமைப்பின் உறுப்புரைகள் 13,14ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மறுக்கின்றது.

தடுத்து வைக்கின்ற பொழுது சித்திரவதைக்கும் பிழையான வழிநடத்தலுக்கும் உதவும்.இந்த புதிய சட்டத்திலேயே 14 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற ஏற்பாடு காணப்பட்டாலும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடங்களின் பின்னரே நிகழக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நீதவான் முன்னிலையில் கொண்டு வரப்படுகின்ற பொழுது தனது கருத்துக்களை கூறுவதற்கு நேரம் வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டிருப்பினும் எந்தளவு சாத்தியம்?

வெளிநாட்டில் உள்ளவரை அல்லது வெளிநாட்டவரை இந்த சட்டத்தின் கீழ் இலகுவாக கைது செய்து மூன்று அல்லது ஆறு மாதங்கள் தடுத்துவைக்க முடியும் PTA ன் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னரே கைது செய்ய முடியும் ஆனால் PTA ன் கீழ் பொலீஸ் நேரடியாகவே கைது செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று எந்த கூட்டம் தங்களுக்கு பாதகம் என நினைக்கின்றார்களோ அக்கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் பொலீசாருக்கு வழங்கப்படுகிறது.

இரகசிய வாக்கு மூலங்கள் அல்லது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுவதற்கான அதிகாரம் நீதவானுக்கு இருந்தது, ஆனால் தற்போது DIG க்கு வழங்கப்படுகிறது மேலும் ஒட்டுக்கேட்டல்,  ஈமெயில்,  இன்டர்நெற் மற்றும் டெலிபோன் அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் அதிகாரம் போலீசாருக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்