விசேட அலகில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிநெறி
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட அலகில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான செயற்பாட்டு அடிப்படையிலான பயிற்சிநெறி நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலக ரீதியாக உள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளை இனங்கண்டு அப்பிள்ளைகளுடைய திறன்களையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் வழங்குதல் இத் திட்டத்தினுடைய நோக்கமாகும் என மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்தும் உரையாற்றுகையில் விசேட தேவையுடைய பிள்ளைகள் எனக் கூற காரணம் அவர்களை எந்தவிதத்திலும் மாற்றுத்திறனாளியாக கூறுவதற்கு எனக்கு விருப்பமில்லை. இந்த பிள்ளைகள் பிறந்த நேரத்தில் புறக்கணிக்கப்பட்டால் அவர்களுக்கு அன்பு, ஆதரவு, பாசம் என்பவற்றை நாம் வழங்கியே ஆக வேண்டும்
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நாங்கள் எதிர்பார்க்கும் விடயம் என்னவென்றால் இப்பிள்ளைகள் தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அவர்களை வளர்த்து விடுதலாகும்.
மேலும் இப்பிள்ளைகளில் சித்திரம் வரைய தெரிந்தவர்கள், நன்றாக நடிக்க தெரிந்தவர்கள், எழுதத் தெரிந்தவர்கள் அவர்களுடைய திறன்களை இனங்கண்டு அவர்களை அந்த துறை நோக்கி வளர்த்து விடுதலே இத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனக் கூறினார்.
இந் நிகழ்வில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் அ. கருணாகரன், மாவட்ட இணைப்பாளர் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் க.மதுரன் ஆகியோர் வளவாளர்களாகவும், சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் விசேட அலகில் கல்வி கற்கும் மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்