
விசாரணையில் புரு மூனா வெளிப்படுத்திய உண்மைகள்
அவிசாவளை பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட பாதாள உலக குற்றவாளியான புரு மூனா என்ற ரவிந்து சங்க டி சில்வா பொலிஸாரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தேகநபர் நேற்று வெள்ளிக்கிழமை அவிசாவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அங்கு, தன் மீது 9 கொலைக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அதில் இரண்டை மட்டுமே செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் கூறினார், பொலிஸ் முன் அவர் கதறி அழுததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொடி லேசியின் தரப்பிலிருந்து தனது தாய் மற்றும் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் தான் பாதாள உலகில் இணைந்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், ஹங்வெல்ல பிரதேசத்தில் கடை உரிமையாளரை கொலை செய்ததாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவர் கடந்த காலங்களில் ரத்கம பிரதேசத்திலும் அவிசாவளையிலும் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்துபவராக செயற்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் சந்தேக நபர் தெளிவாக அடையாளம் காணப்பட்டதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், ரவிந்து சங்க டி சில்வா பாடசாலையில் படிக்கும் போது தன்னை புரு முனா என்று கூறி கிண்டல் செய்த மாணவனையும் கொன்றது தெரியவந்தது.
அத்துடன், மரம் வெட்டும் தொழில் செய்து வந்த தனது தந்தைக்கு தொல்லை கொடுத்து வந்த நால்வரை சங்கிலியால் வெட்டி பலத்த காயப்படுத்தியதாக சந்தேக நபர் பொலிஸாரின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் என்பதும். சந்தேகநபருக்கு எதிராக ரத்கம, ஹிக்கடுவ போன்ற பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும், சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், தப்பியோடிய புரு மூனா நேற்று அவிசாவளை நீதிமன்றில் சரணடைவதற்காக நீதிமன்ற வளாக நுழைவாயிலில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் வைத்து மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஹங்வெல்ல பிரதேசத்தில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இவரே என்பதுடன், டுபாயில் திட்டமிட்ட குற்றவாளியான லலித் கன்னங்கர தலைமையிலான பல குற்றச்செயல்களுடன் இவர் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முன்னதாக, புரு முனாவை பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க செய்து சென்றதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு தேரர்கள் உட்பட 09 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லலித் கன்னங்கர மற்றும் ரத்கம விதுர ஆகியோருக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவராக அவர் செயற்பட்டுள்ளதாகவும், அவர் மீது போதைப்பொருள் மற்றும் கப்பம் பெற்ற குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
