மனித கடவுளுக்கு வந்த சோதனை

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தன்னை வாழும் இயேசு கிறிஸ்து என கூறி ஏமாற்றிய நபர் ஒருவர் தன் உயிரைக் காப்பாற்றுமாறு பொலிஸாரிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கென்யாவின் புங்காமோ மாகாணத்தில் டோங்கரேன் பகுதியைச் சேர்ந்தவர் எலியுட் சிமியு. இவர் தன்னைத் தானே வாழும் இயேசு கிறிஸ்து எனக் கூறி வந்துள்ளார்.

20 வயதில் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு 8 குழந்தைகள். கடந்த 2009ஆம் ஆண்டு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த சண்டையில் சிமியுவின் தலையில் கொஞ்சம் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளார்.

அதன் பிறகு தன்னை வாழும் ஏசு எனக் கூறிக்கொண்டு சிமியு மதப்பிரச்சாரமும் செய்து வருகிறார். தனது பெயரையும் டோங்கரேன் வா இயேசு என மாற்றிக் கொண்டார்.

அவரை நம்பி ஒரு கூட்டமும் இருக்கிறதாம். வாழும் இயேசுவாகிய தனது கணவர் தண்ணீரை தேனீராக மாற்றியதாகவும், அதைக் கிராம மக்கள் அனைவரும் குடித்தனர் என்றும் வாழும் இயேசுவின் அற்புதத்திற்கு சாட்சி கூறியிருக்கியார் சிமியுவின் மனைவி.

இதனால் ஆத்திரமடைந்த ஒருவர் உண்மையில் வாழும் இயேசு என்றால் சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிருடன் வந்து நிரூபியுங்கள் என சமூக ஊடகத்தில் சவால் விட்டுள்ளார்.

தவக்காலத்தை உலகம் முழுவதும் பல கோடி கிறிஸ்தவர்கள் மிகவும் பக்தியுடன் கடைப்பிப்பது வழக்கம். அந்த தவக்காலம் தற்போது தொடங்கியுள்ளது. இந்நிலையில் வாழும் இயேசு மீதான சவால் சமூகவலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது.

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட வேண்டிய இரண்டு திருடர்களை கண்டுபிடித்துவிட்டீர்களா என ஒருவர் பதில் கேள்வி கேட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயேசுவின் கடவுள் தன்மை எப்படி பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதோ,  அதே போல் வாழும் இயேசுவின் புனிதத்தையும் நாம் நிரூபிக்க வேண்டும் என மற்றொருவர் பதிவிட்டிருக்கிறார்.

இப்படி சமூகவலைதளத்தில் இயேசு வா டோங்கரேன்-ஐ சிலுவையில் அறைந்து அவரின் புனிதத்தை உறுதி செய்வது தொடர்பாக படுதீவிரமாக விவாதிக்க தொடங்கியதும் கதிகலங்கிப் போனார் சிமியு.

சிமியுவோ, தன்னை சிலுவையில் அறையக் கூடாது. அப்படி செய்தால் அது உலகிற்குத்தான் பிரச்சனை, மக்களுக்குத்தான் பிரச்சனை, மக்களை காக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று வாதம் வைத்து உள்ளார்.

எனினும் அது பலனளிக்கவில்லை,  இதையடுத்து எதற்கு வம்பு என சிமியு பொலிஸாரிடம் தஞ்சமடைந்துள்ளார்.

மக்கள் தன்னை சிலுவையில் அறைந்து கொல்ல துடிக்கிறார்கள் என்றும், எனவே தன் உயிரை பாதுகாக்க வேண்டும் என்றும் சிமியு பொலிஸாரிடம் முறையிட்டிருக்கிறார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் என்ன செய்வதென்று தெரியாமல் பொலிஸார் திணறுவதாகவும், அடுத்து என்ன நடக்கும் என அறிய கென்ய மக்கள் ஆவலோடு காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.