தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்!

நாய்கள் பராமரிப்பு முகாம் என்ற பெயரில் நாய்களை வாங்கி அதற்கு உணவளிக்காமல் பட்டினி போட்டு கொலை செய்யும் கொடூர அரக்கரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சடலங்களையும் தூக்கி வீசாததால் கூண்டிலேயே அழுகி மக்கும் அவல நிலையும் உருவாகியுள்ளது. இச்சம்பவமானது தென்கொரியாவில் பதிவாகியுள்ளது.

தென்கொரியாவில் வடமேற்கில் அமைந்திருக்கும் கியாங்கி மாகாணத்தில் உள்ளது யாங் பியாங் நகர். இந்த நகரில் வசித்து வரும் நபர் ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயை காணவில்லை என்று அப்பகுதியில்  ஒவ்வொரு வீடாக சென்று தேடியிருக்கிறார். அப்போது ஒரு வீட்டில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அந்த வீட்டு சூழலில் சாக்கு பைகள், ரப்பர் பெட்டிகள், இரும்புக் கூண்டுகளில் ஆயிரக்கணக்கில் நாய்கள் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி போட்டு படுகொலை செய்யப்படுவதை பார்த்து கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார். பல நாட்களாக, பல வருடங்களாக இப்படி நாய்கள் கூட்டம் கூட்டமாக கொடுமைப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதால் சில நாய்கள் அங்கு எலும்புக்கூடுகளாக காணப்பட்டுள்ளன..

கடந்த 2020ம் ஆண்டு தொடக்கம் மூன்று வருடங்களாக இச்செயல் இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு எழும்பக்கூட முடியாமல் இருந்திருக்கின்றன. சில நாய்கள் சதைகள் எல்லாம் அழுகி அந்த கூண்டுகளில், சாக்குப்பைகளில், ரப்பர் பெட்டிகளில் கிடந்திருக்கின்றன. இதை பார்த்து பதறிப்போன அந்த நபர் உடனடியாக விலங்குகள் ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் விரைந்து வந்து அங்கு விசாரணை செய்த போது தான், அந்த வீட்டில் உள்ள 60 வயது நபர் தான் இப்படி அடைத்து வைத்து படுகொலை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

நாய்கள் பராமரிப்பு இல்லம் என்கிற பெயரில் பராமரிப்புத் தொகையையும் வாங்கிக் கொண்டு உரிமையாளர்களிடம் நாயை வாங்கிய பின்னர் அவற்றை இப்படி கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிந்துள்ளது. தொடர்ந்து உயிருக்கு ஊசலாடி கொண்டிருந்த நாய்கள் மீட்கப்பட்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பலரையும் நடுநடுங்க செய்கிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்