மட்டக்களப்பு : 4 வருடங்களின் பின் காட்டிலிருந்து முன்னாள் போராளி மீட்பு

மட்டக்களப்பில் முன்னாள் போராளி ஒருவர் காட்டிலிருந்து நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மட்டக்களப்பு – பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு உட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து குறித்த   போராளி மீட்கப்பட்டுள்ளார்.

தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதியில் தூர்ந்து போன கொட்டகை ஒன்றில் வசித்து வந்த அவர் நேற்று மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நிலையில் பாலா என்னும் நபரே நடுகாட்டில் இருந்து சடா முடியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வளவு காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு,  நீராடாமல்,  தலைமுடி வெட்டாமல் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபராக காணப்பட்டமையால் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.