திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை ஊழியர்களும் இன்று புதன்கிழமை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கம் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று அனைத்து சுகாதார சிற்றூழியர்களும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் தமக்குரிய வைத்திய வசதிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
இருந்த போதிலும் வெளி நோயாளர்கள் பிரிவு இயங்காத நிலையில் அவசர சிகிச்சை பிரிவுகள் மாத்திரம் இயங்கியதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை பெற்றிருந்த நிலையில் கடற்படையினர் ஒவ்வொரு பிரிவிற்கும் அமர்த்தபட்டதையும் காணக் கூடியதாக இருந்தது.
அதேநேரம் வைத்தியர்களினால் மருந்து எழுதப்பட்ட துண்டுகள் கொடுக்கப்பட்ட போதிலும் மருந்தகம் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.