Last updated on April 11th, 2023 at 07:28 pm

திருகோணமலை வழக்கில் சுமந்திரன் ஆஜர்

திருகோணமலை ஷண்முகா கல்லூரி வழக்கில் சுமந்திரன் ஆஜர்

சட்டத்தரணி சுமந்திரன் திருகோணமலை, ஷண்முகா கல்லூரிக்கு அபாயா அணிந்த ஆசிரியையை அனுமதிக்க மறுத்த வழக்கு: பிரதிவாதி சார்பாக ஆஜர்.

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு கலாச்சார ஆடையான அபாயாவை அணிந்து கொண்டு கடமை ஏற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் என்பவரை கடமை ஏற்க விடாமல் தடுத்து பாடசாலையை விட்டு விரட்டி விட்டமை சம்பந்தமான விடயத்தில், பாடசாலை அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அதிபர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுமாறும் இல்லாதுவிட்டால் – ஆசிரியை கடுமையான இழப்பீடுகளை செலுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்தார்.

ஆசிரியை பஹ்மிதா றமீஸ் – ஷண்முகா அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராகத் தொடுத்த வழக்கு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி பயஸ் றஸ்ஸாக் முன்னிலையில் விளக்கத்திற்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (07) எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆசிரியை சார்பாக குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான அப்துல் எம்.எம்.ஏ. சுபையிர்இ எம்.எம். றதீப் அகமட் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

பிரதிவாதி லிங்கேஸ்வரிக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனோடு சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

ஆசிரியை பதவி ஏற்க விடாமல் தடுத்த அதிபர்க்கு சார்பாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் – தன்னுடைய சமர்ப்பணத்தில்; இவ்வழக்கு பொய்யாகப் புனையப்பட்ட ஒரு வழக்கென்றும் அதிபரைத்தான் ஆசிரியை தாக்கினாரே ஒழிய, அதிபரால் ஆசிரியைக்கு எந்த பங்கமும் விளைவிக்கப்ப்டவில்லை என்றும் இவ்வழக்கினை வாபஸ் பெறாவிட்டால் கனதியான நட்டஈடுகளை செலுத்த வேண்டி நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த சட்டத்தரணி றதீப் அகமட், இந்தப் பிரச்சினையில் முஸ்லிம் கலாச்சார ஆடையான அபாயாவினை அணிந்து செல்ல அனுமதிக்காமையானது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும் இவ்வாறான இன ரீதியான குற்ற அணுக்கங்கள் எதிர்காலத்தில் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இருதரப்பினரும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்வதற்கு அவகாசம் ஒன்றினை வழங்குவதற்காக எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதிக்கு இவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்