மஹாஓயா பகுதிக்கு சுற்றுலா சென்றவர் சடலமாக மீட்பு

மஹாஓயா, நுவரகலதென்ன வனப்பகுதியில் சுற்றுலா சென்றிருந்த போது காணாமல் போன நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன் தினம்  சுற்றுலா சென்ற 8 பேர் கொண்ட குழுவில் ஒருவர் காணாமல் போனதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மஹாஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

இந்தக் குழுவினர் நேற்று முன் தினம் பகல் நுவரகலதென்ன வனப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

 

இரவு தூங்கச் சென்று மறுநாள் கண்விழித்து பார்த்த போது சம்பந்தப்பட்ட நபர் அங்கு இல்லாததால் 118 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, ​​குறித்த நபரின் சடலம் குறித்த குழுவினர் இரவு தங்கியிருந்த இடத்திற்கு அருகிலுள்ள பாறையின் கீழ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

 

மஹாஓயா நீர் வழங்கல் சபையின் முகாமைத்துவ உதவியாளரான 34 வயதுடைய உஹன குமரிகம என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

சடலம் அதே இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (05) நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்