கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.

அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை இன்று அதிகாலை 5 மணி தொடக்கம் முற்பகல் 10 மணி சேவையில் ஈடுபடுகின்றன.

அத்துடன் கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவானில் இருந்து காலை 6 மணி முதல் முற்பகல் 11மணி வரை இடம்பெறுகிறது.

இன்று பக்தர்கள் பிற்பகல் 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு சேவையில், குறிக்கட்டுவானில் இருந்து பயணிக்கும், நபர் ஒருவருக்கு, இரு வழிப் பயணக் கட்டணமாக 2000 ரூபா அறிவிடப்படவுள்ளது.

திருவிழாவுக்காக இந்தியாவிலிருந்து இரண்டாயிரத்து 408 பேர் பங்கேற்க உள்ளதாக த ஹிந்து வெளியிட்டுள்ளது.இதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 60 விசைப்படகுகளும் 12 நாட்டுப் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அத்துடன் நாளைய தினம் இலங்கை கடற்படையினரால் கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்பவர்களுக்கான காலை உணவைஇ வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது பக்தர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப் பொருட்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் பயன்படுத்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கான பயண அடையாள அட்டை நேற்று வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்