விபத்தில் இளைஞன் உயிரிழப்பு : தப்பி சென்ற சாரதியை தேடும் பொலிஸார்

-யாழ் நிருபர்-

காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் நீர்வேலி தெற்கு, நீர்வேலியைச் சேர்ந்த இரத்தினேஸ்வரன் பாவிதான் (வயது 23) என்பவராவார்.

கடந்த 23 ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில், முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காரின் பின் பகுதியுடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார்.

மயக்கமடைந்தவர் மீட்கப்பட்டு கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நம சிவாயம் பிறேம்குமார் நேற்று விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிட்டார்.

இவ் விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்