காலதாமதமின்றி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவர் பொப் மெனண்டஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் குரலைப் பறிக்கும் எந்தவொரு முயற்சியும் மறுக்க முடியாத ஜனநாயக விரோதமானது என்றும், இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு தது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் காலதாமதமின்றி சுதந்திரமான மற்றும் நியாயமான உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை மெனண்டஸ் மேலும் வலியுறுத்தினார்.

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது குறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையைப் பகிர்ந்துகொண்டு மெனண்டஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

தேர்தலுக்கான புதிய திகதி எதிர்வரும் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் ஆணைக்குழு ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்