
கொழுந்து பறிக்கும் போட்டி மலையக மக்களை முட்டாளாக்கும் முயற்சியாகும்
-பதுளை நிருபர்-
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கொழுந்து பறிக்கும் போட்டி மலையக மக்களை முட்டாளாக்கி அவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் முயற்சியாகும் ஆனால் இது குறித்து பெருந்தோட்ட தொழிற்சங்கங்களோ அல்லது மலையக அரசியல்வாதிகளோ ஏன் வாய்திறக்கவில்லை என இரத்தினபுரி உதவுத் கரங்கள் அமைப்பின் தலைவர் ஆர் ரமேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் தோட்டங்களில் பெண் தொழிலாளர்களுக்கு இடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.
நானுஓயா – ரதல்ல தேயிலை மலையில் நடைபெற்ற இப்போட்டியில் தலவாக்கலை – பெருந்தோட்ட நிறுவத்தின் சமர்செட் பிரிவைச் சேர்ந்த ஆர்.சீதையம்மா முதலிடத்தை பிடித்தார்ர். அவருக்கு 3 லட்சம் ரூபா பணப்பரிசும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.
இவர் 20 நிமிட்தில் 10 கிலோ 450 கிராம் கிராம் கொழுந்து பறித்திருந்தார்.
இந்நிலையில் இப்போட்டி தொடர்பில் இரத்தினபுரி உதவுத் கரங்கள் அமைப்பின் தலைவர் ஆர் ரமேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
இன்றைய காலகட்டத்தில் உரம் இல்லை கொழுந்து இல்லை என பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த போட்டியை அடிப்படையாக வைத்து 20 நிமிடத்தில் 10 கிலோ கொழுந்து பறிக்க முடியுமாயின் 8 மணித்தியாலத்தில் 50 கிலோ கொழுந்து பறித்தால் தான் ஒரு நாள் ஊதியம் தரலாம் என நிறுவுனங்கள் நிபந்தனை விதித்தால் மலையக மக்களின் நிலை என்னவாகும்?
அந்த போட்டியை பொறுத்தவரை அது நல்ல கொழுந்து இருக்கும் ஒரு மலையில் நிகழ்த்தப்பட்டு கொழுந்து அதிகமாக பறிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்த சம்பவமானது 20 நிமிடத்தில் மலையக பெண்களால் 10 கிலோ கொழுந்து பறிக்க முடியும் என்பதை இந்த நிறுவனங்கள் உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ள ஒரு சம்பவமாகும்.
அப்படியிருக்கையில் இது எதிர்காலத்தில் எமது மக்களுக்கு பெரிய ஒரு பிரச்சினையாக வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஆகவே இதில் உடனடியாக எமது மலையக அரசியல்வாதிகளோ தொழிற்ச்சங்கங்களோ தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும்.
அதேபோன்று மலையக மக்களின் வாழ்க்கை 200 வருடங்கள் பழமை வாய்ந்தது என ஏன் சொல்கிறார்கள்? அப்படி சொல்வதற்கு மலையக அரசியல்வாதிகளிடமோ நிறுவனங்களிடமோ ஊடகங்களிடமோ என்ன ஆதாரம் இருக்கிறது? அந்த 200 வருட பழமை என்ற பேச்சு எமது மலையக மக்களுக்கு மேலும் மேலும் பிரச்சினைகளை தான் கொண்டு வரும்
இந்த நாட்டில் என்று பௌத்த மதம் வந்ததோ அந்நேரம் தொடக்கமே மலையக மக்களும் இங்கு வாழ்கிறார்கள் ஏனெனில் பிரித்தானிய ஆட்சிக்கு முன்னர் இருந்தே எமது மலையக மக்கள் இலங்கையில் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
அப்படி பார்க்கையில் எமது மக்கள் 200 வருடங்கள் பழமை வாய்ந்தவர்கள் அல்ல 400 வருடங்க் பழமை வாய்ந்தவர்கள் அதே போன்று ஏன் மலையக மக்களின் வரலாறு இலங்கை கல்வி அமைச்சின் பாடப்புத்தகங்களில் இல்லை?
நான் மலையக அரசியல்வாதிகள் மற்றும் கல்விமான்கள் புத்திஜீவிகளிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.
இந்த நாட்டில 5 வருடம் ஜனாதிபதியாக இருந்து ஒரு பிரயோசனமும் இல்லாமல் நாட்டை சீரழிப்பவர்களை பற்றி பாடப்புத்தகத்தில் வரும் போது ஏன் நாட்டின் ஒரு பழமை வாய்ந்த இனத்தின் வரலாறு பாடப்புத்தகத்தில் இல்லை. நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் எமது மக்களின் வரலாறு ஏன் பாடப்புத்தகங்களில் இல்லை என்பதற்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
