
கொலை சந்தேகநபர் தப்பியோட்டம் : 4 பொலிஸ் அதிகாரிகள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொய்யான பெயரில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதுடன், அவருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பொலிஸ் அறையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபரை இரவோடு இரவாக விடுவிப்பதற்காக பிக்குகள் போன்று வேடமணிந்து இருவர் விமான நிலைய பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்பதுடன், அண்மையில் ஹங்வெல்ல பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
