
மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து : 17 வயது சிறுவன் உயிரிழப்பு
கந்தானை வெலிகம்பிட்டிய – கணேமுல்ல வீதியில் தும்பெலிய பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் எதிர்திசையில் வந்து கொண்டிருந்த காரை தவிர்க்க முற்பட்டதில் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் எதிர்திசையில் வேகமாக பிழையான பக்கத்தில் பயணித்ததாகவும், அதிலிருந்து விலகி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள், காரின் வலது பக்கம் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சிறுவன் ஜா எல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கப்புவத்தை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக காரை ஓட்டிச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
