பதிவு செய்யப்படாத இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்குவதை தடை செய்யுமாறு மனு
பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (transparency international sri lanka) நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளது.
மனுவில் பிரதிவாதிகளாக சுகாதார அமைச்சர், அமைச்சரவை உறுப்பினர்கள், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டில் பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை வாங்க சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், இந்த மருந்துகளை கொள்வனவு செய்யும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்வனவு நடைமுறையை பிரதிவாதிகள் பின்பற்றத் தவறியுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சுகாதார அமைச்சர் மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்வனவு நடைமுறைகள் உரிய மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், குறித்த மருந்துகளை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றத்திடம் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கொள்வனவு செய்யப்படும் மருந்துகளுக்கு பணம் செலுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் குறித்த அடிப்படை உரிமை மனுவில் கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.