நன்கொடையாக வழங்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்தமை குறித்து விசாரணை ஆரம்பம்

மஹரகம வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்தமை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி நேற்று வியாழக்கிழமை இரண்டு விசாரணைக் குழுக்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.

சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை வழங்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மருந்தாளுனர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, மஹரகம புற்றுநோய்  வைத்தியசாலையில் மார்பக, குடல் மற்றும் எலும்பு மஜ்ஜை புற்றுநோயாளிகளுக்கான புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் தட்டுப்பாடு மேலும் மோசமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கீமோதெரபி சிகிச்சையின் பின்னர் நோயாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் ஹன்சமல் வீரசூரிய தெரிவித்துள்ளார்.