காதலர்தினம் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
காதலர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களை குறிவைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், சிறார்களின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறார்களை குறிவைத்து குறிப்பாக சமூக ஊடகங்கள் ஊடாக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
விஷேட தினங்களை நினைவு கூறும் வகையில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் தடை எதுவும் இல்லை என தெரிவித்த அவர், எனினும் சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் மீது சோதனை நடத்தப்படும் என்றார்.
குறித்த நிகழ்வுகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறார்களின் ஈடுபாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால், இது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.