கிழக்கு ஆளுநருக்கும் நெதர்லாந்து தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
-திருகோணமலை நிருபர்-
இலங்கைக்கான நெதர்லாந்தின் தூதுவர் HE Bonnie Harbach மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் மாகாணத்தில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்தார்.
கிழக்கு மாகாணம் இயற்கை வளங்கள் நிறைந்த மாகாணம் எனவும், அங்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், நெதர்லாந்து காலத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட பழைய கட்டிடங்களில் புதிய வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் கலந்துரையாடியதாகவும் அது மிகவும் பெறுமதி வாய்ந்தது என ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன் நெதர்லாந்து அரசாங்கம் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக பல உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.