
மட்டு.வாழைச்சேனையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு-வாழைச்சேனையில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலிற்கமைவாக குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கல்குடா வீதி வாழைச்சேனையில் வசிக்கும் பாஸ்கரன் சற்குணதேவி (வயது 52) என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் கணவர் யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார் எனவும், உயிரிழந்த பெண்ணும் அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் கடந்த 10 வருடங்களாக மலேஷியாவில் பணிபுரிந்துள்ளார் இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக வாழைச்சேனையில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்துள்ளார்.
வீட்டினை விற்று விட்டு வவுனியாவில் உள்ள தனது உறவினர்களுடன் சென்று வசிக்கும் எண்ணத்தில் வீட்டை விற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும், இவ்வாறான நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
