
பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்த மூவர் கைது
-திருகோணமலை நிருபர்-
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யான்ஓயா பகுதியில் முறைப்பாடு ஒன்றினை விசாரிக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியதுடன், கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
யான் ஓயா என்ற கிராமத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்யச் சென்ற பொலிஸாரை தாக்கியதுடன், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹொரவ்பொத்தானை- யான் ஓயா பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 27, 28 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தலைமறைவாகிய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை கெப்பித்திக்கொள்ளாவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
