சம்பூரில் மாவட்ட பொங்கல் விழா

-மூதூர் நிருபர்-

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையிலும் மாவட்ட செயலகத்தினுடைய ஒழுங்கமைப்பில் மாவட்ட பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை சம்பூர் அருள்மிகு பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி. எச். என். ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.

பாரம்பரிய அம்சங்கள் பலவற்றை வெளிக்கொண்டு வரும் வகையில் இப்பொங்கல் விழா நிகழ்வுகள் மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் மாட்டு வண்டியில் வயலுக்கு சென்று அருவி வெட்டியதுடன், உழவுத் தொழிலின் உன்னத தன்மையை இச்சம்பவம் பறைசாற்றுவதாக அமையப் பெற்றிருந்தது.

பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய அறநெறிபாடசாலை மாணவர்களுக்கு இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகள் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் ,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ். சுதாகரன் ,மாவட்ட இந்து சமயக் கலாசார உத்தியோகத்தர் இலக்குமிதேவி சிறீதரன், அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பரிபாலனசபை உறுப்பினர்கள் ,பிரதேச வாசிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.