9 இலங்கையர்களுக்கு மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
போலி சுற்றுலாப் பயணிகளாகக் காட்டிக் கொண்டதாக சந்தேகிக்கப்பட்ட பெண்ணொருவர் உட்பட ஒன்பது இலங்கையர்கள் மலேசியாவுக்குள் நுழைய மறுக்கப்பட்டதாக மலேசிய சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லை நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், மூன்று தாய்லாந்து பெண்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் புக்கிட் காயு ஹிட்டம் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது .
இவர்களுக்கு செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாதமை மற்றும் சந்தேகத்துக்குரிய பயண நோக்கங்கள் உள்ளிட்ட மீறல்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் 12 பேர்களும் அதே நுழைவுப் புள்ளி வழியாக உடனடியாக தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டனர்.
அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், இந்த நபர்கள் எந்த குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் என கண்டறியப்படவில்லை என்றும், அவர்களிடமிருந்து எந்த பொருள்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.