ஈரானிய கப்பலிலிருந்து இதுவரை 87 சடலங்கள் மீட்பு!

 

இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மீண்டும் ஈரான் நோக்கிப் புறப்பட்ட ‘ஐரிஸ் டேனா’ கப்பலில் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் அக்கப்பலில் இருந்த சுமார் 100 பேர் காணாமல் போயுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் குறைந்தது 87 பேர் உயிரிழந்துள்ளதுடன், மீட்கப்பட்ட அவர்களின் உடல்கள் இலங்கை கடற்படையினரால் காலி – கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் ‘மிலன் 2026’ (MILAN 2026) சர்வதேச கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த போர்க்கப்பல், சர்வதேச கடல் பகுதியில் வைத்து டோர்பிடோ (Torpedo) ஏவுகணை மூலம் தகர்க்கப்பட்டதாகத் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையினர் இதுவரை 87 உடல்களை மீட்டுள்ளனர். மேலும் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 61 படையினரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.