66 வது வயதில் 38 வயது காதலியை கரம்பிடித்த அருண்லால்
மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் அருண் லால்(66). முன்னாள் கிரிக்கெட் வீரரான அருண் புல்புல் சஹா(38) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆரம்பத்தில் இருவரும் பொதுவான பார்ட்டி ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். பின்னர் அவர்களது நட்பு காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இத்திருமண சடங்குகள் கடந்த மாதம் 24ஆம் திகதி தொடங்கியது. மஞ்சள் வைக்கும் இந்நிகழ்ச்சியில் அருண் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டதை புல்புல் சாஹா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
நேற்று இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பதிவுத்திருமணம் செய்துகொண்ட பிறகு கேக் வெட்டித் திருமணத்தைக் கொண்டாடினர். அருண் ஏற்கெனவே ரீனா என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இருவரும் ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்துவிட்டனர்.
ஆனாலும் ரீனாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள அருண் லால் தனது முதல் மனைவியுடன் வசித்து வருகிறார். தனது இரண்டாவது திருமணத்திற்கு அருண் தனது முதல் மனைவியிடம் ஒப்புதல் பெற்றுத்தான் இத்திருமணத்தை நடத்தினார்.