6 இந்திய இராஜதந்திரிகள் கனேடிய அரசாங்கத்தினால் வெளியேற்றம்!

கனடாவுக்கான உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட 6 இந்திய இராஜதந்திரிகளை கனேடிய அரசாங்கம் வெளியேற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீக்கிய பிரிவினைவாத தலைவரான ஹர்தீப் சிங் கொலை சம்பவத்துடன் இந்திய இராஜதந்திரிகளுக்கு தொடர்புள்ளதாகக் கனடா குற்றம் சாட்டியுள்ளது.

அத்துடன், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடாவின் உயர்ஸ்தானிகர் உட்பட ஆறு உயர்மட்ட இராஜதந்திரிகளை வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டிருந்தது.

அத்துடன், கனடாவிலிருந்து தமது தூதுவரை இந்தியா மீளப் பெறுவதாகவும் இந்திய அரசாங்கம் கூறியிருந்தது.

இந்தநிலையிலேயே, உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட 6 இந்திய இராஜதந்திரிகளை கனேடிய அரசாங்கம் வெளியேற்றியுள்ளது.

இராஜதந்திரிகள் வெளியேற்றமானது இரண்டு பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.