அதிக வெப்பத்தால் 54 பேர் உயிரிழப்பு?

இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்லியா பகுதியில் அதீத வெப்பத்தால் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஜூன் 15 தொடக்கம் 17 திகதிகளில் தீவிர வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும் இதில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் எனவும் குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம் மூத்த மருத்துவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்தியது. அதில் இந்த இறப்புகளுக்கு காரணம் அதீத வெப்ப அலை என்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என மூத்த மருத்துவர் ஏகே சிங் தெரிவித்துள்ளார்.

இந்த மரணங்களுக்கு தண்ணீர் அல்லது வேறேதும் காரணங்கள் கூட இருக்கலாம். எனவே, அங்குள்ள தண்ணீர் மாதிரிகளை எடுத்த சோதனை செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மரணங்களுக்கு அதீத வெப்பம் தான் காரணம் என்று முதலில் தகவல் தெரிவித்த பாலியா மாவட்டத்தின் தலைமை மருத்து கண்காணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மரணங்கள் குறித்து அலட்சியமான தகவல்களை தெரிவித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கிழக்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் அடுத்து 3-4 நாள்கள் தீவிர வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அத்துடன் ஒடிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம், கிழக்கு உத்தரப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக பீகாரின் பல பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. தீவிர வெப்பம் காரணமாக பீகார் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்