
531 கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் மானியம்!
டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில் துறையினரை மீளக் கட்டியெழுப்புவதற்காக முதற்கட்டமாக 106.2 மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிவாரணத் திட்டத்தின் கீழ், பிரதேச செயலகங்களினால் உறுதிப்படுத்தப்பட்ட பதிவு செய்யப்பட்ட 531 கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் ஒருமுறை வழங்கப்படும் மானியமாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கேகாலை, மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களுக்கு இந்த நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சூறாவளியின் போது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த சுமார் 10,000 கைத்தொழில் முயற்சியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், நாட்டின் கைத்தொழில் துறையை ஸ்திரப்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் பிரதி அமைச்சரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உடனடி நிவாரணங்களுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையில் கைத்தொழில் துறையை வலுப்படுத்துவதற்கான நீண்டகால மூலோபாயத் திட்டமொன்றையும் அமைச்சு உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
