400 ஆண்டுகால பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி

டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில், பாரம்பரிய அஞ்சல் கடிதங்களின் தேவை மிகக் குறைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான அஞ்சல் நிறுவனமான PostNord, கடித விநியோக சேவையில் இருந்து முழுமையாக விலகத் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து டென்மார்க்கில் கடிதங்களின் பயன்பாடு 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது.

கடிதங்களின் எண்ணிக்கை குறைந்ததால், நாடு முழுவதும் இந்த சேவையைத் தொடர்வது நிதி ரீதியாக நட்டத்தை (ஆண்டுக்கு சுமார் 57 மில்லியன் யூரோக்கள்) ஏற்படுத்துவதாக PostNord தெரிவித்துள்ளது.

டென்மார்க் உலகின் மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும். அரசு ஆவணங்கள், வங்கி விபரங்கள் மற்றும் மருத்துவத் தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே ஆன்லைன் மூலமே பரிமாறப்படுகின்றன.

இதனால் டென்மார்க் முழுவதும் உள்ள சுமார் 1,500 புகழ்பெற்ற சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் அகற்றப்படவுள்ளன. இதில் சில பெட்டிகள் ஏற்கனவே பொதுமக்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடிதங்களுக்குப் பதிலாக, ஒன்லைன் வர்த்தகம் காரணமாக அதிகரித்து வரும் பொதிகள் விநியோகத்தில் மட்டும் இனி PostNord கவனம் செலுத்தும்.

2026 இன்று வியாழக்கிழமை (ஜனவரி 1 ) முதல், அத்தியாவசிய கடிதங்களை அனுப்ப விரும்பும் மக்கள் Dao போன்ற தனியார் நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

இந்த மாற்றம் பெரும்பாலான மக்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், இணையத்தைப் பயன்படுத்தத் தெரியாத முதியவர்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படக்கூடும் எனக் அஞ்சப்படுகிறது. அவர்களுக்காக மாற்று வழிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.