மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் புதையல் தோண்டிய 4 பேர் கைது!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள, பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேரை, இன்று சனிக்கிழமை அதிகாலை, கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், பூஜை பொருட்கள், புதையல் தோண்டும் உபகரணங்கள் மற்றும் 6 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து, சம்பவ தினமான இன்று அதிகாலை 5.00 மணிக்கு, கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர்.

கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படை வீரர் மொனராகலையை சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் ஏனையோர் உறுகாமம், தெய்யத்தகண்டி, பெரிய புல்லுமலை பகுதிகளைச் சேர்ந்த 44, 48, 48 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.