பியகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 4 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்புள்ளதாகக் கூறப்படும் இரண்டு கஜ முத்துக்களை வனவிலங்கு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஹோராகொல்ல தேசிய பூங்காவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பூங்கா அதிகாரிகள் மற்றும் மேற்கு மாகாண உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
விற்பனை செய்வதற்காக தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இரண்டு கஜ முத்துக்களும், அவற்றுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹிங்குரக்கொட, தொடந்துவ மற்றும் ஹிக்கடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதி மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட பாலூட்டிகளான யானைகளின் உடல் பாகங்களை வைத்திருப்பது, காட்சிப்படுத்துவது, எடுத்துச் செல்வது அல்லது விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இந்த கஜ முத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டனர் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.










