இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகள் கைது
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 39 சீன பிரஜைகள் கொண்ட குழுவொன்று அளுத்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின பல பாகங்களில் உள்ள மக்களிடம் பணத்தை மோசடி செய்த குழு இவ்வாறு கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இன்டர்போல் சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள சீனாவினால் தேடப்படும் மூன்று குற்றவாளிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கடந்த 6 மாதங்களாக இலங்கையில் தங்கியிருந்ததாகவும், சிலரை அவர்களது விருப்பத்திற்கு மாறாக தங்கவைத்து ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட வற்புறுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தலில் ஈடுபட்ட பிரதான ஆட்கடத்தல்காரரால் எடுத்துச் செல்லப்பட்ட கடவுச்சீட்டுகள் மூன்று சந்தேக நபர்களிடம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து கணனிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.