39 மடிக்கணனிகளுடன் இந்திய பிரஜை கைது

இலங்கையில் இருந்து 2.9 மில்லியன் ரூபா பெறுமதியான 39 மடிக்கணனிகளை இந்தியாவுக்குக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் இன்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 12 இல் உள்ள மூர் தெருவில் உள்ள தற்காலிக இல்லத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் குறித்த சந்தேக நபர் சென்னை ஹனுமந்த புரத்தை சேர்ந்த கலந்தர் எடுல் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 39 மடிக்கணினிகளை சுங்கவரி செலுத்தி இறக்குமதி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் செப்டெம்பர் 3 ஆம் திகதி சென்னையில் இருந்து நாட்டிற்கு வந்து தற்காலிக இல்லத்தில் தங்கியிருந்தார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தினமும் பயணம் செய்யும் தொழிலதிபர்கள் மூலம் தனது இந்திய கடை உரிமையாளர் ஒருவருக்கு ஒன்றிரண்டு மடிக்கணினிகளை அனுப்பி வந்துள்ளமை தெரியவந்துள்ளது மேலும் இதை செய்வதற்காக ஒரு மடிக்கணனிக்கு 2,000 ரூபாய் வழங்கியுள்ளார்.

இதுவரை 50 மடிக்கணினிகளை இந்தியாவுக்கு இவ்வாறு அனுப்பியிருந்தமை தெரியவந்துள்ளது.

இலங்கையில் உள்ள கடை ஒன்றில் இந்த மடிக்கணினிகளை வாங்கியதாக கூறுவதற்கு ஆதாரமாக போலி பில் ஒன்றை காட்டியுள்ள நிலையில் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டம் வீதியின் பொலிஸ் பரிசோதகர் பெதுருஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.