
37 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
தொடர்ச்சியான பலத்த மழைக்குப் பின்னர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை 494 இடங்களை ஆய்வு செய்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் 2198 இடங்களை ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையில், பலத்த மழை ஓய்ந்த போதிலும், 4 மாவட்டங்களில் உள்ள 37 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தொடர்ந்து மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மண் அதிக ஈரப்பதனுடன் இருப்பதாலும் தற்போது வடகிழக்கு பருவமழை அதிகரித்திருப்பதாலும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டது.
நேற்று காலையில் கூட மீகஹகிவுல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மண்சரிவின் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பதுளை மாவட்டத்தில் பல குடும்பங்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
வானிலை ஆய்வு மையம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 மாவட்டங்களில் உள்ள 34 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2ஆம் கட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 மாவட்டங்களில் உள்ள 17 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 1ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
