3 மாகாணங்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ மற்றும், தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அத்துடன், நிலவும் மழையுடனான வானிலையைத் தொடர்ந்து நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, களுகங்கையின் நீர்மட்டம் மகுர மற்றும் கலவெல்லாவ பகுதிகளிலும், கிங் கங்கையின் நீர்மட்டம் தவலம பகுதியிலும், நில்வளா கங்கையின் நீர்மட்டம் பனதுகம மற்றும் பிட்டபத்தர பகுதியிலும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நில்வளா கங்கையின் நீர்மட்டம் உரவ பகுதியில் அதிகரித்துள்ளதால் அங்கு சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த நீர்நிலைகளை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நிலவும் மழையுடனான வானிலையை தொடர்ந்து பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அநுராதபுரம், இராஜங்கணை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும திறக்கப்பட்டுள்ளதாக அவற்றுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.