3 வாரங்கள் கடந்தும் பணம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்காத பொலிஸார்

போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து எடுக்கப்பட்டு பொலஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம் தொடர்பிலான அறிக்கையை உடனடியாக ஒப்படைக்குமாறு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்கார்களால் கண்டெடுக்கப்பட்ட 78 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை கோட்டை பொலிஸாரிடம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

அவ்வாறு கையளிக்கப்பட்ட பணம் தொடர்பில் 3 வாரங்கள் கடந்துள்ள போதிலும் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதவான் அவற்றை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட 4 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று வியாழக்கிழமை கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.