3 பெண்கள் சித்ரவதை செய்து கொலை – அர்ஜென்டினாவில் வெடித்த போராட்டம்

அர்ஜென்டினாவில் 3 பெண்களை சித்ரவதை செய்து கொலை செய்ய போதைக்கும்பளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 19 ஆம் திகதி விருந்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 3 இளம்பெண்களை ஒரு கும்பல் வேனில் கடத்திச் சென்றுள்ளது.

அங்கு குறித்த மூவரும் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

இதனை காணொளி எடுத்து பெரு நாட்டைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளார்.

போதைப் பொருட்களை திருடினால் இதுதான் கதி என மற்றவர்களை எச்சரிக்கும் வகையில் குறித்த காணொளி இருந்ததாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு 3 பெண்களின் உடல்களும் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 3 ஆண்கள், 2 பெண்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியான போதைப் பொருள் கும்பலின் தலைவனை காவல்துறை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு கொலையாளி களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி சென்றனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், பாலின அடிப்படையிலான வன்முறையை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.