2K கிட்ஸ் இணைய பிரபலம் சீம்ஸ் பப்பி உயிரிழந்தது

சமூக வலைதளங்களில் வைரலாக அடிக்கடி பரவும் புகைப்படங்களில் இதுவும் ஒன்று. நெட்டிசன்கள் மத்தியில் “சீம்ஸ்” என்று செல்லமாக அழைக்கப்படும் வைரல் நாய் உயிரிழந்து விட்டதாக, அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் மூழ்கியே கிடக்கும் 2K கிட்ஸ் மற்றும் அவ்வப்போது மீம்ஸ்களை பதிவிட்டும், அதனை பகிர்ந்து வரும் 90-ஸ் மற்றும் 80-ஸ் கிட்ஸ்களுக்கு சீம்ஸ் நன்கு அறிமுகமான செல்லப்பிராணி ஆகும்.

மீம்ஸ் வழியே உலகம் முழுக்க பிரபலம் அடைந்து இருக்கும் சீம்ஸ், உயிரிழந்த தகவல் நெட்டிசன்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எனினும், சீம்ஸ்-ஐ வளர்த்து, பராமரித்து வந்த அதன் உரிமையாளர்கள்- சீம்ஸ் மறைவை அடுத்து யாரும் வருந்த வேண்டாம் என்றும், இணையத்தில் வைரல் ஐகானாக சீம்ஸ் என்றும் நினைவுக் கூறப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுக்க பிரபலமாக இருந்து வந்த சீம்ஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், சீம்ஸ் திடீர் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

பால்ட்ஸ் என்ற இயர்பெயர் கொண்ட சீம்ஸ் அதன் ஒரு வயது இருக்கும் போது, ஹாங் காங்கை சேர்ந்த குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டது.

பிறகு, சமூக வலைதளங்களின் காலக்கட்டத்தில், அதன் புதிய உரிமையாளர்கள் பால்ட்ஸ்-இன் செல்ல அசைவுகள் மற்றும் அதன் கியூட்-ஆன செயல்களை வீடியோவாக்கி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தனர்.

இதோடு பப்பி சீம்ஸ் (Puppy Cheems) என்ற பெயரில், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஒன்றையும் உருவாக்கினர்.

2017-ம் ஆண்டு வெளியான சீம்ஸ்-இன் புகைப்படம் உலகம் முழுக்க வைரல் ஆனது. இதன் மூலமாகவே சீம்ஸ் இணையத்தில் சமூக வலைதள பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க