மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் – குமார ஜயகொடி

வாக்குறுதியளித்தபடி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு மின் உற்பத்திச் செலவைக் குறைப்பது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போதைய முன்னேற்றங்கள் குறித்துப் பின்வருமாறு விளக்கமளித்தார்.

“நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும்போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சராசரி செலவு 37 ரூபாயாக இருந்தது. தற்போது அதனை 29 ரூபாய் வரை (22 சதவீதத்தால்) குறைக்க எம்மால் முடிந்துள்ளது.”

ஒரு அலகு மின்சாரத்தின் உற்பத்திச் செலவை 25 ரூபாய் வரை கொண்டு வருவதே அரசாங்கத்தின் அடுத்தகட்ட இலக்காகும்.

“மின் உற்பத்திக்கான செலவைக் குறைக்காமல் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தற்போது அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலையே காணப்படுகிறது. எமது திட்டமிட்ட நடவடிக்கைகளின் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, அதன் நன்மையை மக்களுக்கு வழங்குவோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுமொத்த மின்சாரக் கட்டணத்தையும் 30 சதவீதத்தால் குறைப்போம் என்ற வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.