
வைத்தியசாலையில் கைப்பேசிகளை களவாடியவர் பொலிஸாரிடம் சிக்கினார்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் பணம் என்பவற்றை திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரையும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் உட்பட இருவரை நேற்று வியாழக்கிழமை மட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 18 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது
மட்டு போதனா வைத்தியசாலையில் நோயாளிக்கு உதவியாக இருந்த பெண் ஒருவரின் கைப்பையில் வைத்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் 10 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பை திருட்டு போயுள்ளது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்னர் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த திருட்டு தொடர்பாக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரதீப் பெர்னார்ந்தே தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கைது செய்தவர்களை மட்டு தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த இளைஞன் கிழமையில் ஒரு நாள் வைத்தியசாலைக்குள் நுழைந்து வாட்களில் பலரின் கையடக்க தொலைபேசிகளை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திருடி வந்துள்ளதாகவும் அதனை விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
