கால்நடை வைத்திய அதிகாரியை ஒப்பந்த அடிப்படையிலாவது நியமியுங்கள் – யாழ். மாநகரின் முன்னாள் முதல்வர்
-யாழ் நிருபர்-
கால்நடை வைத்திய அதிகாரியை ஒப்பந்த அடிப்படையிலாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்த யாழ். நகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, அதற்கான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் முதல்வர் மதிவதனி தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது இவ்வாறு வலியுறுத்திய அவர், மாநகர சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
அவ்விடயங்கள் குறித்து ஆளுநரிடம் முறையாகக் கோரும் பட்சத்தில் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
இதனிடையே யாழ். மாநகரின் 10ஆம் வட்டாரத்தில் துரும்பங்குளம் தூர்வாராமல் இருப்பதால் மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் அதனால் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தவகையில் குறித்த குளத்தை துரிதமாக தூர்வார நடவடிக்கை எடுப்பது அவடியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், யாழ். மாநகர சபைக்குரிய காணியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்காமல் யாழ். மாநகர சபையே பொறுப்பேற்று அதன் வருமானத்தையும் ஈட்டலாம் என்று வலியுறுத்திய முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, வேம்படி சந்தியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றால் ஏற்படும் சனநெருசடியை குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியும் அது ஏன் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.