
28 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்து வைப்பு
மட்டக்களப்பு – கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருத்தானை , அக்குறானை மினிமினித்தவெளி கிராமங்களை அபிவிருத்திக்கான திட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிராமிய அபிவிருத்தி பணியகத்தினால் செயல்படுத்தப்படும் சமூக வலுவூட்டல் தேசிய திட்டத்தின் முதற் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், முருத்தானை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட அக்குறானை மினிமினித்தவெளி ஆகிய இரண்டு கிராமங்களை 28 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, அமைச்சின் செயலாளர், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர், திணைக்கள தலைவர்கள், எனைய திணைக்களங்களில் உத்தியோகத்தர்கள், கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தரகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இன்றைய தினம் குறித்த கிராம மக்களுக்கு அனைத்து நிர்வாக கட்டமைப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு சேவையாக மருத்துவ சேவை, அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல் , முதியோர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தல், இளைஞர்களுக்கான வழிகாட்டல்கள், பதிவுத் திருமண சேவை என பல துறை சார்ந்த சேவைகள் என்பனவும் இடம்பெற்றது.
மேலும் நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன். விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள், முதியோர் அடையாள அட்டை ,மரக்கன்றுகள் வழங்குதல் போன்றான நிகழ்வில் இடம்பெற்றது.
யானை வேலி அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் வைத்தல் மற்றும் 36குடும்பங்களுக்கான மலசல கூடம் அமைப்பதற்கான திட்டம் ஆரம்பம், சுகாதார சிகிச்சை நிலைய கட்டிட திருத்தப்பணி மற்றும் மூன்று வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு என்பனவும் இடம்பெற்றது.