திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலையில் திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை குறித்து திருமணப் பதிவாளர்களுக்கான விழிப்புணர்வு
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் திருமண பதிவாளர்களுக்கான முன் திருமண ஆலோசனை வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கையில் உள்ள தேசிய மகளிர் ஆணைக்குழுவின் 1938 என்ற எண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவிச் சேவைக்கான புகார் மையமாகும்.
இப்புகார் மையத்திற்கு கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் குடும்ப சண்டைகள், வன்முறைகள் காரணமாக குறுகிய காலத்திலேயே திருமண முறிவுகள் மற்றும் விவாகரத்து அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனாலேயே சிறப்பான திருமண வாழ்க்கை அமைத்துக்கொள்ள தேவையான ஆலோசனைகள் வழங்கும் நோக்கில் திருமணப் பதிவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்வின் பிரதான குறிக்கோளாகும்.
இந்நிகழ்வில் முன் திருமண ஆலோசனையின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து உளவியல் ஆலோசனை உத்தியோகத்தர் எல்.டி. கிருஷாந்த லக்மால் (இலங்கை கடற்படை) விளக்கமளித்தார்.
மேலும் திருமணத்தின் சட்ட ரீதியான முக்கியத்துவம், வன்முறைகள் மற்றும் விவாகரத்து அதிகரித்தல் குறித்து சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் ஜே.ஜே.எம். தமயந்தி குமாரி தெளிவுபடுத்தினார்.
இந்த திட்டம் மாவட்ட அடிப்படையில் நிலையான ஒரு முயற்சியாக தொடரப்படவுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் ஆரம்பக் கட்டமாகவும் அமைகிறது.
அதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்டோரின் இரத்த அழுத்தம், நீரிழிவு , உடல் நிறை குறியீடு (BMI) ஆகியவை கடற்படையின் ஒத்துழைப்புடன் மற்றும் திருகோணமலை மாவட்ட லயன்ஸ் கிளப்பின் அனுசரணையுடன் பரிசோதிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மாவட்ட திருமணப் பதிவாளர்கள், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டிணமும் சூழலும் , மூதூர், கிண்ணியா, கோமரங்கடவெல மற்றும் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.