
26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராத தொகை அறவிடப்பட்டுள்ளது – நுகர்வோர் விவகார சபை
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராத தொகை அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் தற்போது வரையில், சுமார் 22 ஆயிரம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில், 21 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் மூலம் நீதிமன்றங்கள் ஊடாக 26 கோடியே 76 இலட்சத்து 30 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
