
நுவரெலியா – கண்டி வீதியில் குடைசாய்ந்த கனரக வாகனம்
நுவரெலியா கண்டி பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
லபுக்கலை குடாஓயா பகுதியில் வைத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புற்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து நுவரெலியா வழியாக அம்பேவல நியூசிலாந்து பாற் பண்ணைக்கு ஏற்றிச்சென்ற கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை விபத்தில் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியின் வளைவு பகுதியில் வைத்து திடீரென கனரக வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வாகனம் குடைசாய்ந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை விபத்து காரணமாக அவ்வீதியின் ஊடாக பயணித்த ஏனைய வாகனங்கள் வீதியின் இரு புறங்களிலும் பயணத்தை தொடர முடியாதவாறு நீண்ட வரிசையில் நின்றதன் காரணமாக ஒரு மணிநேரம் குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்யும் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.


