உலகளவில் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறை 2030ஆம் ஆண்டுக்குள் 11.1 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் உலக மக்கள்தொகை இரண்டும் வயதாகி வருவது இந்தப் பற்றாக்குறையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என WHO தெரிவித்துள்ளது.
WHO வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 122 நாடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வில், உலகளவில் நான்கு மருத்துவர்களில் ஒருவர் 55 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் அடுத்த பத்து ஆண்டுகளில் ஓய்வு பெறக்கூடிய நிலையில் உள்ளனர். அதிக வருமானம் கொண்ட நாடுகளில் இந்த விகிதம் மேலும் அதிகமாகக் காணப்படுவதுடன், சுமார் மூன்று மருத்துவர்களில் ஒருவர் அடுத்த பத்து ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டளவில் 67 நாடுகளில், அந்நாடுகளின் மக்கள்தொகையின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான சுகாதாரப் பணியாளர்கள் இருக்கமாட்டார்கள் என WHO கணித்துள்ளது. தற்போதைய சுகாதாரப் பணியாளர் விகிதத்தை மக்கள்தொகையுடன் பேணுவதற்கே கூடுதலாக சுமார் 832,000 சுகாதாரப் பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகளவில் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவச்சிகள், பல் மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் 10,000 பேருக்கு 44.8 சுகாதாரப் பணியாளர்கள் என்றிருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 67.9 ஆக உயர்ந்துள்ளது. தற்போது உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான சுகாதார மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் உள்ளனர். எனினும், நாடுகளுக்கு இடையிலான சுகாதாரப் பணியாளர் விநியோகத்தில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை தொடர்வதாக WHO தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய WHO பிராந்தியத்தில் உள்ள மருத்துவர்களின் அடர்த்தி, ஆபிரிக்க WHO பிராந்தியத்துடன் ஒப்பிடுகையில் 13 மடங்கு அதிகமாகவும், தாதியர்கள் மற்றும் மருத்துவச்சிகளின் அடர்த்தி ஆறு மடங்கு அதிகமாகவும் உள்ளது. வயதான மக்கள்தொகையால் சுகாதார சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும் நிலையில், அனுபவம் வாய்ந்த சுகாதாரப் பணியாளர்கள் ஓய்வு பெறுவது இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கக்கூடும் என WHO எச்சரித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குதல், கல்வி மற்றும் பயிற்சியில் முதலீடு செய்தல், அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடுகளுக்கிடையிலான சமத்துவமின்மையை குறைத்தல் ஆகியவை எதிர்கால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியம் என WHO வலியுறுத்தியுள்ளது.










