2028 ஆம் ஆண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த முடியாது

 

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின் 105 ஆவது பக்கத்தில், புதிய கடன் மறுசீரமைப்பின் கீழ் புதிய நிபந்தனைகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் எட்டப்படும் என்று கூறப்பட்டிருந்தாலும், அது முன்னெடுக்கப்படாது.

முந்தைய அரசாங்கத்தின் இணக்கப்பாடு அதே வடிவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது போன்ற இன்னும் பல விடயங்கள் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைப்போம், ரூ.9000 கட்டணத்தை ரூ.6000 ஆகவும், ரூ.3000 கட்டணத்தை ரூ.2000 ஆகவும் குறைத்து நிவாரணம் வழங்குவதாகச் சொன்னாலும் அது எதுவும் நடக்கவில்லை.

மின்சாரக் கட்டணத்தை 15% குறைத்தனர். இப்போது மீண்டும் 6.8% ஆல் மின்சார கட்டணத்தை அதிகரிக்கப் போகின்றனர்.

செலவுகளைச் சரியாகக் கணக்கிடாமலே இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஆடாமல், மாற்றத்தை வேண்டியே, தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்தே பெரும் மக்கள் ஆணையைப் பெற்றுத் தந்தனர்.

2028 முதல் நாம் ரூ. 5 பில்லியன் கடனைச் திருப்பிச் செலுத்த வேண்டும். நமது நாட்டின் முதலீட்டுச் சூழலில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கூறுகிறது.

கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, நிறுவன மற்றும் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்துவ தோல்வி, ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தொடர்பில் முன்கூட்டியே கணிக்க இயலாமை, வெளிப்படைத்தன்மையில் காணப்படும் பிரச்சினைகள், கட்டமைப்பு சார் பிரச்சினைகள், அரச நிறுவனங்கள் தொடர்பான பாரதூரமான பிரச்சினைகள் என குறிப்பிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் பல சிக்கல்கள் காணப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளன.

நமது நாட்டின் ஆடை ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தை வாய்ப்பைக் கொண்ட அமெரிக்கா கூட இப்போது இதைச் சொல்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.