இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 2027ஆம் ஆண்டு முக்கிய மைல்கற்களை எட்டவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவும், வரலாற்றுச் சிறப்புமிக்க இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 75ஆவது ஆண்டு நிறைவும் அடுத்த ஆண்டு அனுஷ்டிக்கப்படவுள்ளன.
கொழும்பில் நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் 77ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாக தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வுகளை நடைமுறைப்படுத்தி, பரஸ்பர உதவி மற்றும் நீண்டகால நட்புறவை அடிப்படையாகக் கொண்ட ஒத்துழைப்பை மேலும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் சீனாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், கல்வி, குடிநீர், காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தத் தடுப்பு உள்ளிட்ட துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்வதாக தெரிவித்தார். 2027ஆம் ஆண்டை இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான முக்கிய ஆண்டாக பயன்படுத்துவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் தூதுவர் வெய் ஹுவாசியாங் குறிப்பிட்டார்.










